மீண்டும் நான்..
இந்த ஆண்டு பாதி கடந்த நிலையில் முதல் பதிவு எழுத இப்பொழுதான் நல்ல நேரம் வந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு காரணம் வேலைப்பளு மற்றும் சரக்கு பற்றாக்குறை.
இந்த இடைவேளையில் எவ்வளவோ மாற்றங்கள், மர்மங்கள் தமிழகத்தில். அதில் சில அரசியல் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை.
1. தி.மு.க கூட்டணியின் வெற்றி : எதிர்பாராத வெற்றி. நான் எதிர் பார்த்த வரையில் 50-50 என்று தான் தோன்றியது. ஆனால் முடிவு எதிராக அமைந்து நிலையான ஆட்சி அமைந்தது மிக நல்ல விஷயம். தி.மு.க செய்த பல கவர்ச்சி கரமான பணிகள் அதன் வெற்றிக்கு காரணம் மற்றும் பண விசயத்தில் தாராளம் காட்டியதும் வெற்றிக்கு ஒரு காரணம் குறிப்பாக மதுரையில். விவசாயிகளின் நண்பன் வெற்றி பெற்றதில் என் பெற்றோருக்கு மகிழ்ச்சி, எனக்கும் தான். இலவச மின்சாரம், உழவர் சந்தை, கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களால் தான் தி.மு.க வாக்கு வங்கி இன்னமும் சிதையாமல் இருக்கிறது. மின்வெட்டு பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்தால் நாற்பதும் கிடைத்திருக்கும்.
2. பா.மா.க வின் தோல்வி : நான் மிகவும் ரசித்த நிகழ்வு இதுதான். அரசியல் நாடோடிகள் இருப்பது நாட்டுக்கு நல்லதில்லை என்று மக்கள் கருதியதாலும், தி.மு.க வின் வெறி கொண்ட உழைப்பினாலும்தான் இது நடந்தது. அரசியலில் அனைவரும் கூட்டணி மாறியவர்கள் தான், ஆனால் ராமதாஸ் அய்யா அளவுக்கு யாரும் செய்ததாக எனக்கு நினைவில்லை. மக்கள் மிக சரியான தண்டனை கொடுத்து விட்டார்கள். இனி வரும் காலங்களில் ராமதாஸ் கொஞ்சமாவது யோசிப்பார். நாங்கள் போகும் கூட்டணி தான் வெற்றி பெரும் என்பது போன்ற சப்பை கட்டு வாதங்கள் வருவது குறையும்.
3. வைகோ தோல்வி : மிகப்பெரிய அதிர்ச்சி. இவர் தோல்வி காட்டுவது என்னவென்றால் உள்ளூர் பிரச்சனைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து, எந்நேரமும் இலங்கையை பற்றி பேசியது மக்களுக்கு பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் இவர் அடிமை போல அம்மையாரிடம் இருப்பது அவர் கட்சி தொண்டர்களே ரசிக்காத ஒன்று. நாலுக்கே நாற்பது சுற்று பேசியவர் இவர். ராமதாஸ் அளவுக்கு கூட இவர் பெறாதது ம.தி.மு.க வின் எதிர்காலத்துக்கு நல்லதில்லை. பேசாமல் கட்சியை கலைத்து விட்டு அம்மையாரிடம் ஐக்கியமாக்கிவிடுவது இவர் எதிர்காலத்துக்கு நல்லது.
4. கொங்குநாடு முன்னேற்ற பேரவையின் எழுச்சி : கட்சி ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே சுமார் ஆறு லட்சம் (போட்டியிட்ட 12 தொகுதிகளில்), அதாவது இரண்டு சதவிகிதம் வாக்குகளை பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வாங்கி தி.மு.க கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்க சாதனை. கள்ளுக்கு அனுமதி பெறுவது, வன்கொடுமை சட்டத்தை கைவிடுவது ஆகியன இவர்களின் முக்கிய கோரிக்கைகள். இந்த கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய எதிர் காலம் இருக்கிறது. இவர்கள் இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாத நிலை எங்கள் மண்டலத்தில் வரும் காலம் தொலைவில் இல்லை. அடுத்த சட்ட மன்ற தேர்தலில் இவர்களுடன் கூட்டணி அமைக்க பெரிய கட்சிகள் போட்டி போடப்போவது நிதர்சனமான உண்மை. என் உறவினர்கள் பலர் இந்த கட்சியில் ஐக்கியமாக மிக முக்கிய காரணம் வன்கொடுமை சட்டம் குறித்த கொள்கை.
5. E.V.K.S.இளங்கோவன் தோல்வி : எங்கள் தொகுதியில் இளங்கோவன் தோற்றது எதிர்பார்த்த ஒன்று தான். கணேச மூர்த்தி பல தோல்விகளை கண்ட பிறகு ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார். இளங்கோவன் தோல்விக்கு மிக முக்கிய காரணம் அவர் வாய் தான். நாவடக்கம் இல்லாதவர் எந்த துறையிலும் வெற்றி பெற முடியாது, அதிலும் குறிப்பாக அரசியலில். மின் வெட்டு இவருக்கு எதிராக போனதும் ஒரு காரணம். எனக்கு வருத்தம் என்னவென்றால் இவர் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகியிருந்தால் எங்கள் தொகுதிக்கு ஒரு சிறப்பு கரிசனம் காட்டியிருப்பார். ம.தி.மு.க எம்.பி தொகுதிக்கு நல்லது செய்வது என்பது இயலாத காரியம். ஆளும் கட்சியினர் விட மாட்டார்கள். ஆகவே எங்கள் தொகுதியில் ஒரு மண்ணும் மாறாது அடுத்த ஐந்து ஆண்டுக்கு.
6. ராசாவுக்கு I.T : இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அறிவிப்பு. ராசாவுக்கு என்ன வெங்காயம் தெரியும் இந்த துறையை பற்றி. தயாநிதி எவ்வளவோ செய்திருப்பார். எல்லாவற்றையும் கனிமொழி லாபி கெடுத்து விட்டது. இருந்தாலும் தயாநிதி செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது டெக்ஸ்டைல் துறையில், குறிப்பாக திருப்பூர் பக்கம் இவர் இத்துறைக்கு மந்திரியானது குறித்து ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது நான் கேள்வி பட்ட வரையில். அழகிரி ஏதாவது நல்ல திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. பார்ப்போம்.
இன்னும் இருக்கு எழுத, பகுதி இரண்டில் சந்திப்போம்.