தசாவதாரம் விமர்சனங்களை பற்றி ஒரு விமர்சனம்.
அப்பப்பா.. கமலே உங்களுக்கு இதெல்லாம் தேவையா? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை போலவே நீங்களும் படம் எடுத்திருந்தால் இவ்வளவு விமர்சனங்களை சந்தித்து இருக்க மாட்டீர்கள். உங்கள் பிரச்சினையே புதுசாக நீங்கள் முயற்சி செய்வது தான். குருவி போல மசாலா குப்பைகளை ரசிக்கும் ரசிகர்கள் உங்கள் படத்தை கண்டபடி விமர்சிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் புது சோறு சாப்பிட முயற்சி செய்வது நீங்கள் தான். மற்ற அனைவரும் பழைய சோறு தான் சப்பு கொட்டி சாப்பிடுகிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
கருத்து சொல்லவும் படத்தை பார்க்காமல் இருப்பதட்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. படத்தில் குறைகள் உள்ளது என்பது உண்மை தான். குறையே இல்லாத படங்களை யாராலும் தர முடியாது. குறைகளை விட நிறைகள் சிறிது அதிகம் இருந்தால் படம் ரசிக்கும் படி இருக்கும். அது தசாவதாரத்துக்கும் பொருந்தும்.
கமல் எவ்வளவு நல்ல படம் தந்தாலும் அதை சரியில்லை என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. 'அன்பே சிவம்' என்று ஒரு நல்ல படத்தை கமல் தந்தார். அதை எத்தனை பேர் ரசித்து பார்த்தார்கள் ? கமலின் படங்களுக்கு இவ்வளவு லாஜிக் கேட்கும் மக்கள் 'சாமி' போன்ற லாஜிக் இல்லாத மசாலா குப்பைகளை எப்படி பார்க்கிறார்கள் ?. கமல் மட்டும் என்ன இளித்த வாயரா? எல்லாரையும் போலவும் அதை விடவும் சிறப்பாகவும் மசாலா படங்களை கமலால் நிச்சயமாக தர முடியும். ஆனால் அவர் அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் புது முயற்சி செய்கிறார் ? எல்லாருக்கும் பிடிக்கும் படி படம் எடுப்பது இயலாத காரியம்.
என்னை மிகவும் கடுப்படித்த விமர்சனம் விகடன் விமர்சனம் தான். வெறும் 43 மார்க் கொடுத்திருந்தார்கள். குருவிக்கும் அதே மார்க் தான், அஜித் பில்லாவுக்கும் அதே மார்க் தான். அவர்கள் எந்த படத்துக்கு தான் நூறு மார்க் கொடுப்பார்கள்? தெரியவில்லை. நூறெல்லாம் நான் கேட்கவில்லை இந்த படத்துக்கு. ஆனால் குருவிக்கும், அஜித் பில்லாவுக்கும் கொடுத்த மார்க் தான் தசாவதாரத்துக்கும் என்றால் என்னால் சகித்து கொள்ள முடியவில்லை.
விகடனில் விமர்சனத்தில் சொல்லியிருக்கிறார்கள் " பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட சுனாமியை இப்படி ஒரு கோணத்தில் அணுகலாம் என்ற ஒரு புள்ளிதான் கதை. ஆனால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, ஊரே துடிதுடித்துத் திரியும் சூழலில், கமலும் அசினும் காதல் பேசுவது... ஸாரி ! "..
ஒரு நண்பர் நச்சுன்னு கேட்டிருந்தார். "சென்னையில் சுனாமி வந்து பல்லாயிரம் பேர் இறந்த போது விகடன் என்ன செய்தது ? போட்டோ பிடித்து கவர் ஸ்டோரி போட்டதை தவிர ?. சுனாமி வந்து இவ்வளவு பேர் இறந்து விட்டார்கள் என்று வருந்தி அந்த வார விகடனில் ஜோக் எதுவும் போடாமலா இருந்தார்கள் ?. காதல் கதை எதுவும் வரவே இல்லையா அந்த வாரம் ?. இப்படி செய்யும் விகடன் இந்த கமெண்டை தசாவதாரத்துக்கு கொடுக்கும் தகுதி இருக்கிறதா ?"
அதே தான் என்னோட கேள்வியும்.
என்னை பொறுத்த வரையில் தசாவதாரம் என்பது ஒரு பாடம். Chaos தியரி பற்றி என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது இந்த படம் தான். எதிர்பார்த்த படி படம் இல்லை என்றாலும் படம் என்னை ஏமாற்றவில்லை. ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் திரை அரங்கில். புரியவில்லை என்றால் மீண்டும் பாருங்கள் திருட்டு V.C.D யில்....