ஷாருக்கானுக்கு போட்டியாக விஜய் கான்.....
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விஜய் கான் என பெயர் சூட்டுவதாக சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று இரவு ரம்ஜான் நோண்பு இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் நிழ்ச்சியில் நோண்புக் கஞ்சி குடித்தார். பின்னர் பேசுகையில், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக சர்ச்சுக்கு அருகில் இந்த நோண்பு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முஸ்லீம் சமுதாயத்தினர் அனைவரும் நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால்தான் சமச்சீர் கல்வி வேண்டும் என்று கூறுகிறேன்.
தேமுதிக தேர்தலில் போட்டியிட்டபோது 18 முஸ்லீம்களுக்கு சீட் கொடுத்தேன். அரசியலுக்காக நான் நோண்பு விருந்துக்கு வரவில்லை.
பக்ரீத்துக்கு மட்டன் கொடுத்தேன்
கடந்த பக்ரீத்தின்போது ஏழை முஸ்லீம்களுக்கு மட்டன் கொடுத்தேன். இந்த ஆண்டும் அதிகமாக வழங்கவிருக்கிறேன்.
ஏழைக் குழந்தைகள் கல்விக்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கு கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். நீங்களும் அதுபோல உதவி செய்யுங்கள்.
நான் எதையும் சொல்ல மாட்டேன். சொன்னால் கண்டிப்பாக செய்வேன் என்றார் விஜயகாந்த்.
நிகழ்ச்சியில் பேசிய திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை தலைவர் முகம்மது பெய்க் பேசுகையில் விஜயகாந்த்துக்கு கேப்டன், புரட்சிக் கலைஞர் என பல பெயர்கள் உள்ளன. எனவே நாங்கள் இன்று அவருக்கு விஜய்கான் என்ற பெயரை சூட்டுகிறோம் என்றார். இதையடுத்து கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், எனது மகனுக்கே முஸ்லீம் பெயரைத்தான் வைக்க நினைத்தேன். பிரச்சினை வரும் என்பதால் விட்டு விட்டேன். எனது படங்களில் நடித்தவர்களுக்கு கூட லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் என பெயரிட்டேன். இப்போது எனக்கு விஜய் கான் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
பொழக்க தெரிஞ்ச மனுஷன் விஜய் கான்...
Source: Oneindia