Saturday, August 22, 2009

நொந்த சாமி.  


தமிழ் சினிமாவுக்கு இது போதாத காலம். அதிகம் செலவு செய்யப்பட்ட படங்கள் அடி வாங்குவது வாடிக்கை ஆகிவிட்டது, அந்த வரிசையில் இதோ கந்தசாமியும். ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆகாது, என்னா பில்ட் அப் குடுத்தாங்க.

கதை சுருக்கம் என்னவென்றால் அநியாயமாக பணம் சேர்த்தவர்களிடம்
கொள்ளை அடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது. கிட்டத்தட்ட ஜென்டில் மேன் கதை மாதிரி தான். திருப்போரூர் முருகன் கோவிலில் மக்கள் தங்கள் குறைகளை எழுதி ஒரு மரத்தில் கட்டினால் அவற்றை CBI அதிகாரியான ஹீரோ நிறைவேற்றுகிறார். எப்படி என்பது தான் கதை.

படம் ரொம்ப ரொம்ப நீளம் கிட்டத்தட்ட
மூன்றரை மணி நேரம். இந்த படத்துக்கு எடிட்டர் இருந்தாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

அடுத்து வடிவேலு, பொதுவாக இவர்
திரையில் வந்தாலே மக்கள் கைதட்டி சிரிப்பார்கள். ஆனால் இந்த முறை வடிவேலு மக்களுக்கு அந்த வேலையே கொடுக்கவேயில்லை. படத்தின் இடையிடையே வந்து காமெடி என்ற பெயரால் மக்களை கொடுமை படுத்துகிறார். ஒரு சில காட்சிகளை தவிர மற்ற எல்லாம் குப்பை. ஓவர் நைட்ல ஒபாமா டயலாக் சூப்பர். வடிவேலுவுக்கு சரக்கு தீர்ந்து போய்விட்டது.

அப்புறமா எதுக்கெடுத்தாலும் ஓவர் பில்ட் அப் கொடுக்கிறாங்க. விக்ரமை
கொல்ல ரொம்ப தூரம் ஹெலிகாப்டரில் கூட்டி போவது ஒரு உதாரணம். அதே மாதிரி சண்டை காட்சிகள் வேஸ்ட். விக்ரமின் கண்ணை கட்டி விட்டு வில்லன் வகையறாக்கள் ஷூவை கழட்டி வைத்து சத்தம் வராமல் சண்டை போடுவது ரொம்ப பழைய காலத்து சீன். அதே மாதிரி கண்ணை கட்டி விட்டு டப்புன்னு சுட்டா முடியற மேட்டருக்கு ரொம்ப இழுக்கிறார்கள். சண்டை காட்சிகளின் போது முருகா முருகா என்று பின்னணி சவுண்ட் விட்டு மாரியம்மா படம் பார்க்கும் எபெக்ட் கொடுக்கிறார்கள். அது பெண்களை கவர என்று நினைக்கிறேன்.

விக்ரம் அவர் வேலையே கச்சிதமாக
முடித்திருக்கிறார். அதிகம் நடிக்க வாய்ப்பில்லை இந்த படத்தில் அவருக்கு. பல வேஷங்கள் இந்த படத்தில் இருந்தாலும் எதற்கு அப்படி செய்கிறார் என்றால் சரியான காரணம் இல்லை. சில இடங்களில் மணிரத்னத்தின் ராவணன் கெட்டப்பில் வருவது போல எனக்கு தோன்றுகிறது. பல வருஷம் ஒரே படத்தை எடுத்தால் இப்படித்தான் ஆகும். ஸ்ரேயா பிட் துணிகளுடன் திறமையை முழுதாக 'காட்டியிருக்கிறார்'. கழுத்து எலும்பெல்லாம் தெரிகிறது. கஷ்ட பட்டு நடிச்சு நல்ல சோறு கூட சாப்பிடலேன்னா எப்படி ஸ்ரேயா. இப்படியே போனால் உங்களை ஹீரோக்கள் கட்டி பிடித்தால் எலும்பு குத்தும் நாள் ரொம்ப தூரம் இல்லை.

இன்னொரு காமெடி என்னன்னா படத்தில் வரும் எல்லாரும் விக்ரமுக்கு உதவி
செய்கிறார்கள். CBI பெரிய ஆபிசர் முதல் எல்லாரும் இவருக்கு உதவி செய்கிறார்கள். பம்பர கண்ணாலே பாட்டுக்கு ஆடும் முமைத் கான் கூட விக்ரமின் ஆளோ என்று எனக்கு ஒரு நிமிடம் தோன்றியபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. முமைத் கான் அந்த பாட்டுக்கு ஆட வில்லன் முப்பது லட்சம் கொடுத்தாக சொல்கிறார். அதுவும் கூட பில்ட் அப் தான். பெரிய பட்ஜெட் படம்தானே என்று அள்ளி விடுகிறார்கள்.

பாடல்கள் சூப்பர். ஆனாலும் தேவையில்லாமல் அடிக்கடி வருகிறதோ என்று
தோன்றுகிறது. பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. ஐநாக்ஸ்ல தான் படம் பார்த்தேன் ஆனாலும் திருட்டு VCD பார்ப்பது மாதிரி இருந்தது சில நேரங்களில். அது திரை அரங்கின் குறையா அல்லது ஒளிப்பதிவே அப்படியா என்று எனக்கு பெருங்குழப்பம்.

பிரபு போலீஸ் அதிகாரியாக தன் வேலையே கச்சிதமாக செய்திருக்கிறார். வில்லன் இந்திரஜித்தும் பரவாயில்லை. பம்பர கண்ணாலே பாட்டு முடிவில்
வில்லனை அரைகுறையாக மக்கள் மத்தியில் நிற்க வைத்து விக்ரம் வீர வசனம் பேசுவது ரொம்ப காமெடி. இன்னொரு வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி, சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. மற்றுமொரு வில்லன் அலெக்ஸ் பரவாயில்லை.

படம் முழுக்க இன்னொருவர் மெயின் ரோல் பண்ணியிருக்கிறார். அவர் சேவல் தான். விக்ரமின் சேவல் கெட்டப்புக்கு இறகு கொடுப்பது முதல் பல வேலை சேவலுக்கு இந்த படத்தில். விக்ரமின் கூடாரத்தில் போலீஸ் அதிகாரியான பிரபு நுழையும்போது சில சேவல்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பதை காட்டுவார்கள். கோழி குழம்பின் சுவை என்னை ஆட்கொண்டது அந்நேரத்தில். அவ்வளவு ப்ரீ டைம் கொடுக்கிறார்கள் திரைக்கதையில் கண்டதையும் நினைக்க..

எவ்வளவோ தப்பு செய்தாலும் ஹீரோ கடைசியில் நிரபராதி ஆகி விடுகிறார். கொடுக்கப்பட்ட தண்டனை இன்னொரு காமெடி, அவரை ராஜஸ்தானுக்கு மாற்றி
விடுகிறார்கள். கிளைமாக்ஸ் அந்நியனில் வருவதை போல இருக்கிறது. ராஜஸ்தான் போய் அங்குள்ள கோவிலில் கட்டப்பட்டுள்ள சீட்டுகளை படித்து நிறைவேற்றி கந்தசாமி ஹிந்திசாமி ஆகிவிடுகிறார்.

சுசி கணேசன் தானும் ஒரு நடிகனே என்று ஆஜர் ஆகிவிடுகிறார். நடிக்க வந்த
நேரத்தில் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையில் ஒரு நல்ல செய்தி இருப்பது உண்மை தான், ஆனால் திரைக்கதையில் இன்னும் கவனமாக இருந்திருந்தால் மிக நல்ல படம் கிடைத்திருக்கும். சில காட்சிகளும் வசனங்களும் நன்றாக இருக்கிறது. படம் மிகவும் சுமார் ரகம் தான்.

பி.கு. என் நண்பனை படத்தை பத்தி பில்ட் அப் கொடுத்து கூட்டி போயிருந்தேன். படம் முடித்து செம கடுப்பில் இருந்தான், வெளியே வந்த போது சன் கிளாஸ் கடையை பார்த்த உடன் அவன் முகத்தில் பல்பு எரித்து. உனக்கு இது சூப்பரா இருக்கும்டான்னு என்னை ஏத்தி விட்டு அதை வாங்க வைத்து பழி தீர்த்து கொண்டான். படத்துடன் சேர்த்து தண்ட செலவுகள பல எனக்கு ஒரே நாளில்....