Friday, September 18, 2009

நம்மைப்போல் ஒருவன்.  


எங்காவது எப்போதாவது வெடிகுண்டு வெடித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
எங்காவது எப்போதாவது தீவிரவாத தாக்குதலால் யாராவது மரணமடைந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
எங்காவது எப்போதாவது அநீதி நடந்ததை அறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
எங்காவது எப்போதாவது மத சண்டை குறித்த செய்தியை அறிந்தால் நீங்கள் என்ன எண்ணுவீர்கள்?

இந்த கேள்விக்கெல்லாம் பதிலாக உங்களிடம் ஒருவித இனம் புரியாத கோபமும் படபடப்பும் இருக்குமானால் நீங்களும் என்னைப்போல் ஒருவன், கமலும் நம்மைபோல் ஒருவன்.

தமிழ் சினிமாவின் சராசரி பார்முலாக்களை உடைத்தெறிந்த படம் உன்னைப்போல் ஒருவன். நாலு பாட்டு, ஐந்து சண்டை, ஆறு காமெடி ட்ராக், ஏழு முறை தொப்புள் என்று தமிழனை சிக்க வைத்த படங்களுக்கு மத்தியில் இந்த படத்தை சொந்த காசு போட்டு ரீமேக் செய்திருக்கும் கமலுக்கு முதலில் ஒரு சபாஷ். கமலும் மசாலா படங்கள் பல உருவாக்கியிருந்தாலும் இப்போது கமல் போகும் பாதை சரியாக மிக தெளிவாக தெரிகிறது.

கதை சுருக்கம் என்னவென்றால் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை அதிகாரியான மோகன்லாலை மிரட்டி பல்வேறு குற்றங்களை செய்த பயங்கர தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்து அவர்களை கமல் என்ன செய்கிறார் என்பது தான். படம் 110 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் சொல்லவந்ததை நச்சென்று சொல்லியிருகிறார்கள் எந்த வித தொய்வுமின்றி.

இந்த படம் ஒரிஜினல் படத்தில் இருந்து வேறுபடுகிறது கமலால், மோகன்லாலால். இருவரும் போட்டி போட்டுகொண்டு நடித்திருக்கிறார்கள். கமல் ஒரே உடையில் ஒரே இடத்தில இருந்து பல வித உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறார். கமலுக்கு இணையான கம்பீரம் மோகன்லாலின் நடிப்பிலும். மோகன்லால் நிஜ போலீஸ் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். கமலும் ஒரு சாமானியன் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். காவல் அதிகாரி வேடத்தில் வரும் கணேஷ் வெங்கட்ராம் படத்துக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுக்கிறார்.

இந்த படத்தில் கலைஞரின் பங்களிப்பும் இருக்கிறது, முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞர் குரல் நடித்திருக்கிறது. படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள் தான், இரா.முருகனுக்கு வாழ்த்துக்கள். வசனம் ஒவ்வொன்றும் நடு மண்டையில் ஆணி அடித்த உணர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. எல்லா வசனங்களிலும் ஒருவித கம்பீரமும் நகைச்சுவையும் கலந்தே வருகிறது.

பின்னணி இசை படத்தின் காட்சிக்கு தக்கபடி கச்சிதமாக கூடவே வருகிறது. ஆங்கில படம் பார்க்கும் உணர்வை இசையின் மூலம் வரவழைத்து விட்டார் ஸ்ருதி.

ஒளிப்பதிவு பிரம்மாண்டம், இயக்கம் கட்டுக்கோப்பு.

இது சாமானியனை பற்றிய படமாய் இருப்பினும், ஆங்கில கலப்பு அதிகம் இருப்பதால் பல சாமானியர்களுக்கு புரிவது சிரமம். மற்றபடி என்னைப்பொறுத்த வரையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். வணிக ரீதியாகவும் கமலை கைதூக்கி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரிஜினல் படத்தை பல முறை பார்த்தவர்கள் கூட இன்னொரு முறை தாராளமாக பார்க்கலாம், நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



7 comments: to “ நம்மைப்போல் ஒருவன்.